'உன்னைப் போல் ஒருவன்' எதிர்வினை
நல்ல விதத்தில் எடுக்கப்பட்ட ஒரு முட்டாள் தனமான படம் 'உன்னைப் போல் ஒருவன்'. ஆங்கிலத்தில் சொன்னால், "simple-minded" திரைப்படம் என்று அதனைக் கூறலாம்.
தீவரவாதத்திற்குத் தீவிரவாதம்தான் தீர்வு என்கிறார் படத்தின் நாயகனாகத் தோன்றும் கமலஹாசன். சில தீவிரவாதிகளை -- அதுவும் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் தீவிரவாதிகளை -- கொன்றுவிட்டால் தீவிரவாதம் ஒழிந்துவிடுமா என்ன? போதாததற்கு, தீவீரவாதிகளைப் பிடித்தவுடனேயே கொன்றுவிட வேண்டும் என்றும் கமல் அறிவுரை கூறுகின்றார்! இத்தகைய அறியாமையைக் கண்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
அப்பாவி மக்கள் பலரை ஒரு நாடு கொன்று குவித்தால் அது போர். அதையே தனி நபரோ, இறையாண்மை இல்லா குழுக்களோ, அமைப்புகளோ செய்தால் அது தீவிரவாதம்.
9/11 படுகொலையைத் தீவிரவாதத்தின் உச்சம் என்று கொள்ளும் நாம், அதன் பெயரில் அமெரிக்காவால் தொடர்ந்து கொன்று குவிக்கப்படும் பல்லாயிரக்கனக்கான அப்பாவி ஈராக்கியர்களின், அப்கானிஸ்தானியர்களின் அவதியைக் கண்டும் காணாதிருக்கின்றோம். ஏனென்றால் 9/11 தீவிரவாதம்; ஈராக்/அப்கான் போர் நியாயப் போர். 9/11ல் கொல்லப்பட்டோர் அப்பாவிகள்; ஈராக்/அப்கானில் கொல்லப்படுவோர் 'தவிர்க்க இயலா சேதம்' (collateral damage). 'உன்னைப் போல் ஒருவன்' இத்தகைய வேறுபாடுகளை மருந்துக்கும் அலசவில்லை. தீவிரவாதத்திற்கான காரணிகளையும் மேலோட்டாமாகவே பார்க்கின்றது.
அதோடு, தீவிரவாதிகள் உயிருக்கு பயந்த கோழைகள் என்ற போலிச் சிந்தனையைப் படம் கற்பிக்கின்றது. தீவிரவாதிகளை அவ்வப்பொழுது நாம் கொன்றுவிட்டால் அச்சம் ஏற்பட்டு தீவிரவாதத்தை அவர்கள் கைவிட்டுவிடுவார்கள் போலும்! (தற்கொலைப் போராளிகளைப் பற்றி அறிந்திராத கமலின் 'கோமன் மேன்' எந்த உலகத்தில் தனது நேரத்தை கழிக்கின்றார் என்று தெரியவில்லை.)
அதே வேளையில், தீவிரவாதிகளை இவ்வாறு கொல்வதால் ஏற்படும் தீமைகளை 'உன்னைப் போல் ஒருவன்' தொட்டுக் கூடப் பார்க்கவில்லை.
ஒன்று: தீவிரவாதிகள் கொடுக்கும் தகவல் இதர தீவிரவாதிகளைப் பிடிக்க உதவலாம் அல்லது அடுத்த தீவிரவாதச் செயலைத் தடுக்க உதவலாம்.
இரண்டு: பிடிபட்ட தீவிரவாதிகளைக் கூண்டிலேற்றி தண்டனை வாங்கித்தர தீவிரவாதிகள் உயிருடன் இருப்பது அவசியம் -- பிணம் சாட்சியம் சொல்லாதல்லவா?
மூன்று: தீவிரவாதம் ஆநீதியையும் ஒரு சமூகத்தின் தீர்க்க முடியா மனக்குறையையும் மையமாகக் கொண்ட ஒரு வித 'நோய்'; அந்நோய் பரவுவதைத் தடுக்க வேண்டுமெனில் மேற்குறிப்பிட்ட இரண்டையும் வேரோடு அழிக்க வகைசெய்தல் வேண்டும். அநீதிக்கு பதில், கமலின் 'கோமன் மேன்' கூறுவது போல், அநீதியல்ல; நீதி! இவ்வுண்மையை அமெரிக்கா இன்று உணர்கிறது. 'குவாந்தானாமோ பே' மூகாமில் (Camp X-ray) அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகளை அடித்துத் துன்புறுத்திக் கொன்றதற்காக இன்று அந்நாடு வருந்துகின்றது.
என்ன, படத்திலுள்ள குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டுகின்றேன் என்று நீங்கள் நினைக்கலாம். பலர் இப்படத்தைச் சிலாகித்து எழுதிவிட்டதால் அதனை இங்கு தவிர்த்திருக்கின்றேன். படத்தில் இடம் பெறாத பல விஷயங்கள் என்னைப் பெரிதும் கவரவே செய்தன – கனாக் காட்சிகளோ, பாடல்களோ படத்திலில்லை; அத்தகைய காட்சிகளுக்காகவே தோன்றும் நாயகிகள் யாருமில்லை; பத்து இருபது பேரை அடித்துத் துவைக்கும் நாயகனில்லை; கதைக்குத் தொடர்பில்லாத கதையோட்டத்திற்குத் தடையாக அமையும் நகைச்சுவை பாத்திரங்களில்லை; நடிகனைத் தூக்கிப் பிட்டிக்கும் ‘பஞ்ச்’ வசனங்களேதுமில்லை. நடிப்பும் இசையும் சிறப்பாகவே அமைந்திருந்தன. இருப்பினும் படத்திலுள்ள குறைகளே மேலோங்கி இருப்பதாக எனக்குப் படுகின்றது.
ஆக ... 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் பல நல்ல, மெச்சத்தக்க அம்சங்களையும் திரைப்பட நுணுக்கங்களையும் கொண்டிருந்தாலும் -- 'கந்தசாமி' போன்ற நேரக் கேடு அல்ல இப்படம் -- அதன் மையக் கருத்து சிறு பிள்ளைத் தனமாகவும், அறிவார்ந்த சமூகத்திற்கு இழுக்கு விளைவிப்பதாகவும், மனித உரிமை அத்துமிறல்களுக்குத் துணைபோவதாகவும் அமைந்துள்ளது.
'அன்பே சிவம்', 'குருதிப்புனல்', 'மகாநதி' போன்ற ஒப்பற்ற திரைப்படங்களை அளித்த கமலஹாசன், 'உன்னைப் போல் ஒருவன்' என்ற கேவளத்தை அளித்திருப்பது வருத்தத்தையே தருகின்றது.