எனது முதல் தமிழ் வலைப்பதிவு: நான் கடந்த மூன்று ஆண்டுகளாக வலையில் பதிப்பித்து வந்திருந்தாலும், சொற்பாமான தமிழ் வலைப் பதிவுகளையே செய்துள்ளேன். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன: எனக்கு தமிழில் புலமை இல்லாதது ஒன்று; மற்றொன்று, வலையில் தமிழ்ப்பதிவு செய்யும் போது நான் எதிர்நோக்கிய சிக்கல். இவ்விரண்டிற்கும், இந்த மூன்று ஆண்டுகளில், ஓரளவிற்காவது தீர்வு ஏற்பட்டுள்ளது என்று நினைக்கின்றேன். அதனால்தான் இக்கன்னி முயற்சி...
மேலும், 'அடிக்க அடிக்கதான் அம்மியும் நகரும்', 'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' என்று சும்மாவா சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர் நம் முன்னோர்?
தமிழை எடுத்துக்கொண்டால், அம்மொழி எந்த அளவிற்கு -- மற்ற உலக மொழிகளுடன் ஒப்பிடுகையில் -- பின் தங்கிய நிலையில் இருக்கின்றது என்பதை நாம் நன்கு அறிந்திருக்கின்றோம். (அறிந்திருக்க வேண்டும்.) இத்துணை காலமும், சோம்பிப் போய் இருந்த தமிழனுக்கு சுய மரியாதையையும், தன்னம்பிக்கையையும் ஊட்டி தமிழர்களிடையே ஒரு மருமலர்ச்சியை ஏற்படுத்திய பெரியார், பாவாணர், அண்ணா, கலைஞர் போன்றோர், தமிழின் தொண்மையையும், தூய்மையையும், கன்னித் தன்மையையும் வலியுறுத்திச் சென்றனர்.
ஆனால், அவர்களின் அன்றைய பேச்சு இன்று காலத்திற்கு ஒவ்வாததாக தென்படுகின்றது. ஆங்கில மொழிப் பெருக்கில் தமிழ் அடித்துச் செல்லப்பட்டு, தன் தனித்தன்மையை இழந்திடுமோ என்ற அச்சம் நம்மை இன்று உலுக்குகின்றது. நாம் விழித்தெழ வேண்டும். இன்று தமிழ் தொண்மையானதா என்பதில் கேள்வியில்லை; தொடருமா என்பதுதான் கேள்வி.
அன்று இந்தி மற்றும் சமற்கிருத புகுத்தலைச் சுயமானமுள்ள தமிழர்கள் எதிர்த்தனர். இன்று அதே தமிழர்கள் ஆங்கிலப் புகுதலை எதிர்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். ஆனால், எதிர்ப்பதோடு மட்டும் நின்று விடுதல் கூடாது. காலத்திற்கும் நிலைத்து நிற்கும் படி தமிழ் வளர, அது ஒரு அறிவு சார்ந்த மொழியாகவும், இக்கால மாற்றங்களை உள்வாங்கிய மொழியாகவும் உருவெடுத்தல் அவசியம்.
அதற்கு நாம் அனைவரும் சளைக்காமல் தோள் கொடுத்தாக வேண்டும்.
